மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தினார். ராஜேஷின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த்,
"ராஜேஷ் மிகவும் எளிமையானவர். அவருக்கு நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்குச் சான்றுதான் இது. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. சினிமா, அரசியல், விஞ்ஞானம் என தேடித்தேடி கற்றுக்கொள்வார். மற்றவருக்கு தெரிய வேண்டும் என்று பாடுபடுவார். ஒரு நல்லவராக வாழ்ந்திருக்கிறார்.
என்னை அடிக்கடி சந்தித்து ;நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்' என்று கூறி அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர். அவரை இழந்தது ஒரு பேரிழப்பு" என்று கூறினார்.
சென்னை ராமபுரத்தில் இன்று பிற்பகல் ராஜேஷின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
நடிகர் ராஜேஷ் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாகத் தொடங்கி தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.