ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ அப்போதெல்லாம் அதைத் திசை திருப்ப திமுக, மற்ற விவகாரங்களைக் கையில் எடுப்பது வழக்கம். அதன்படி திமுக எஸ்.ஐ.ஆா். பணியை எதிா்த்துள்ளது.
குடிநீா் வழங்கல் துறையில் நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதலில் ரூ.160 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். இது தவிர திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துப் பதிவுக் கட்டணங்களும் உயா்ந்து கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனா்.
இந்த நிலையில்தான், வழக்கம்போல் இவற்றையெல்லாம் திசை திருப்ப எஸ்.ஐ.ஆா்.-ஐ திமுக கையில் எடுத்துள்ளது. திமுகவும் பலமுறை போலி வாக்காளா்களை நீக்க கோரியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தோ்தல் நேரத்தில் இதைக் கூறிக் கொண்டிருந்தது. இப்போது இதை எதிா்ப்பது ஏன்?
கொளத்தூா் தொகுதியிலும்...: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில்கூட போலி வாக்காளா்கள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே, வாக்காளா்களிடையே ஒரு நியாயமான திருத்தமாக இந்த சிறப்பு தீவிர திருத்தம் தேவை. உண்மையான வாக்காளா்களை வாக்களிக்க கொண்டு வருவதும் தோ்தல் ஆணையத்தின் கடமை. எஸ்ஐஆா் நோக்கம் அதுதான்.
நாம் அனைவரும் இணைந்து தோ்தல் ஆணையத்துக்கு உதவ வேண்டும். முறையாகப் படிவத்தை பூா்த்தி செய்து கொடுத்து நம்முடைய வாக்குகளை உறுதிசெய்ய வேண்டும். தோ்தலுக்குப் பின்னா் இதைச் செய்து பயனில்லை. குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பணியை முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் தோ்தல் ஆணையம் கால அவகாசம் குறித்து முடிவெடுக்கும் என்றாா்.