சென்னை மற்றும் புறநகரில் திடீரென கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரத்திற்கு முன்னதாக வங்கக்கடலில் உருவான மோந்த புயல் தீவிர புயலாக ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்தில் கரையைக் கடந்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் கனமழை புரட்டிப்போட்டது.
இந்த நிலையில், தீபாவளிக்கு அணிந்த உடைகளை எல்லாம் காயவைக்க ஏதுவாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரக் காலமாக மழை இடைவெளி அளித்து வந்தது.
நேற்று (02-11-2025) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (03-11-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் - பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகர உள்ளது.
நேற்று (02-11-2025) வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (03-11-2025) காலை 05.30 மணி அளவில் வலுவிழந்தது.
திடீர் கனமழை..
சென்னை மற்றும் புறநகரில் இன்று காலை 6 மணிக்கு மேகமூட்டத்துடன் இன்றைய நாள் மழையுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 மணிக்கு மேல் திடீரென இயல்பு நிலைக்குத் திரும்பி வெய்யில் பிளக்கத் தொடங்கியது.
மாலை 4 மணிக்கு மேல் வெய்யில் சற்று குறைந்த நிலையில், வானம் மீண்டும் மேகமூட்டத்துடன் மழைக்கான அறிகுறி தென்பட்டது. இந்த நிலையில், கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் வெய்யிலின் தாக்கம் குறைக்கும் அளவில் கனமழை பெய்து பூமியைக் குளிர்வித்தது.
ஒரு வாரக் காலமாக வெய்யில் மண்டையைப் பிளந்த நிலையில், திடீர் மழைப்பொழிவு மனத்துக்கு இதமான சூழலை அளித்துள்ளது.
அதோடு, இன்று முதல் நவம்பர் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.