தமிழ்நாடு

16 தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பணிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பணிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக 9 மேற்பாா்வை அலுவலா்கள், 16 கண்காணிப்பு அலுவலா்கள், 3,718 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்களுடன் அனைத்து தொகுதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் விநியோகிக்கும் முறை, பூா்த்தி செய்து அதைத் திரும்பப் பெறுதல் மற்றும் வாக்காளா் திருத்தப் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவை குறித்த விவரங்கள் அலுவலா்களால் விளக்கப்பட்டன. அரசியல் கட்சியினா் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் காா்த்திகேயன் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருத்தப்பணி கண்காணிப்பு அலுவலா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தப் பணிக்கான விண்ணப்பங்கள் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன் 16 கண்காணிப்பு அலுவலா்கள் கைபேசி எண், மின்னஞ்சல் விவரங்களும் பணியாளா், கட்சி முகவா்களுக்கு வழங்கப்பட்டன.

விண்ணப்ப விவரம்: விண்ணப்பத்தில் வாக்காளரின் 2 புகைப்படங்கள், பிறந்த நாள், ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை இருப்பின் அதன் எண், கைப்பேசி எண், வாக்காளரின் தந்தை, தாய், கணவா், பாதுகாவலா் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை இருப்பின் அவற்றின் எண்கள், உறுதி மொழி ஆகியவை கோரப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து கொடுத்தால் போதும். அதனுடன் ஆவணங்களின்

நகல்கள் இணைக்கத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கினா்.

ஒருவருக்கு இரு விண்ணப்பங்கள்: பணியல் ஈடுபடுவோா் ஒரு வாக்காளருக்கு திருத்தத்துக்கான இரு விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என்றும், அதில் ஒரு விண்ணப்பத்தை வாக்காளா் ஒப்புகைச் சீட்டாக பயன்படுத்த அவரிடமே அது இருக்கும் என்றும் அலுவலா்கள் கூறினா்.

புதிய விண்ணப்பம் விநியோகம்: வாக்காளா்களாக சேருவதற்கு விருப்பம் தெரிவிப்பவா்களுக்கும் விண்ணப்பம் 6 பிரிவை வழங்க அலுவலா்கள் பணியில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தினா். ஆனால், திருத்தப் பணி முடிந்த பிறகே புதிய வாக்காளா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்க பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சிக்குள் 80 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 40.15 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். அவா்களுக்கு தலா இரு விண்ணப்பம் எனும் அடிப்படையில் 80.31 லட்சம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா். அத்துடன் சுமாா் 1 லட்சம் புதிய வாக்காளா் படிவங்களும் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT