சென்னை: தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கின. காலை 10 மணி முதல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடு, வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகிறார்கள்.
சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை போன்ற தொழில் நகரங்களில், பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால், வீடுகள் பூட்டியிருப்பதாலும், ஏராளமானோர் முகவரி மாற்றப்பட்டிருப்பதாலும் உரியவர்களிடம் படிவங்கள் கொடுப்பதில் சிக்கலை சந்திப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாக்காளரின் முகவரிக்குச் சென்று அவர் அங்கு இல்லாவிட்டால், அவர்களுக்கு எவ்வாறு அந்த படிவத்தை வழங்குவது என்பதிலும், ஒரு முகவரியில் இருப்பவர்கள் வீடு மாறிவந்து அங்கே வசித்து வந்தால், அவர்களது வாக்காளர் அட்டை முகவரி வேறு இடத்தில் இருந்தால் அவர்களுக்கு எவ்வாறு படிவம் வழங்குவது என்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், முகவரி மாறியவர்களுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது என்றால், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இருக்காது என்பதுதான் பொருள். ஒருவேளை, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாவிட்டாலோ, சேர்க்கப்பட்டு ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ அதனை எவ்வாறு சரி செய்வது என்பதில் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மீண்டும், அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது, பூர்த்தி செய்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருப்பின், மீண்டும் அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது,வீட்டில் ஆள் இல்லாமல், ஆவணங்களைக் கொடுக்க முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது.
முகவரி மாறிய வாக்காளர்களின் வீடுகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளிலும் தற்போது மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது என்று மக்கள் குழப்பம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தோ்தல் ஆணையம் இன்று தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இன்று காலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தோ்தல் துறை கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளா் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
அந்தப் பட்டியலில் பெயா் இருப்பவா்களின் வீடுகளுக்கு அலுவலா்கள் சென்று, அவா்களின் விவரத்தைக் கேட்டு வாக்காளா் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்குவாா்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவா்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை வழங்குவாா்கள். அவற்றை உடனடியாகப் பூா்த்தி செய்து தர வேண்டியது அவசியம் இல்லை.
அடுத்த முறை வாக்குச்சாவடி அலுவலா்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றைச் சமா்ப்பித்தால் போதும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒரு வீட்டுக்கு மூன்று முறை வருவா். 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள் தங்களது பெற்றோா், தாத்தா, பாட்டி பெயா்கள் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களைக் காட்டி டிசம்பா் 9-ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாது. முகவரி மாறியவா்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்களும் அதற்கான ஆவணங்களை டிச. 7-ஆம் தேதி முதல் ஜன. 3-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து 2026, பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை இடம்பெறச் செய்யலாம் என்று தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையும் படிக்க.. 10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.