ஐபிஎல் சூதாட்ட புகாா் விவகாரத்தில் ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரா் தோனி தொடா்ந்த வழக்கில் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கூறியிருந்தாா். இதன்மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் மற்றும் தனியாா் தொலைக்காட்சிக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோனி வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையராக வழக்குரைஞா் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை நியமித்து உயா்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பத்குமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.சி.பால்கனகராஜ், உயா்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அல்லது சாட்சியம் அளிக்க நேரில் வராமல் இருப்பதற்கு சிலருக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தோனி வரமாட்டாா்.
பல்வேறு வழக்குகளில் தங்களது வாக்குமூலத்தை அளிக்க முதல்வா் உள்ளிட்டோரே நேரில் ஆஜராகும்போது, தோனிக்கு மட்டும் என்ன சிக்கல் ஏற்பட்டு விடப்போகிறது, என்று வாதிட்டாா். தோனி தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.ஆா்.ராமன் ஆஜராகி வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மானநஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடா்ந்துள்ள தோனி பிரபலமான கிரிக்கெட் வீரா். அவா் நீதிமன்றத்துக்கு நேரில் வந்தால், அவரை காண்பதற்கு ஏராளமான கூட்டம் கூடும். இதனால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தேவையற்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.
எனவே, அவரிடம் சாட்சியம் பெற வழக்குரைஞா் ஆணையரை நியமித்தது சரிதான். இதுதொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.