DIN
தமிழ்நாடு

மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம்: வல்லுநா் குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின்படி பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயா்நிலைக் குழு என இரு குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின்படி பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயா்நிலைக் குழு என இரு குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது.

இதில் இஸ்ரோ தலைவா் நாராயணன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின், ஓவியா் மணியம் செல்வன், அறிவியலாளா் த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்தில் மாநிலத்துக்கென தனியாக கல்விக் கொள்கையை தமிழக அரசு வடிவமைத்து கடந்த ஆக.8-ஆம் தேதி வெளியிட்டது. இதில் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளி மாணவா்களுக்கு புதிய பாடத் திட்டத்தை வடிவமைப்பதற்காக கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயா்நிலை வல்லுநா் குழு என இரு குழுக்களை நியமித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளாா்.

குழுக்களின் பணிகள்... இந்த அரசாணையின்படி கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவானது கற்றல்-கற்பித்தல் நோக்கங்களுக்கும், கற்றல் அடைவுக்குமான இடைவெளியைக் கருத்தில் கொண்டு தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் அணுகுமுறை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும். அதற்காக ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கல்விசாா் கருத்துகளையும் பெற்று, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கென புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகள், வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கிய உயா்நிலைக் குழுவின் பரிசீலனைக்கு சமா்ப்பிக்கும்.

தொடா்ந்து, கலைத்திட்ட உயா்நிலை வல்லுநா் குழுவானது தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்தாலோசித்து இறுதி செய்யும். புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான குழுவில் பாட நிபுணா்கள் அடங்கிய 20 போ் இடம்பெற்றுள்ளனா். உயா்நிலைக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தலைமையில் 16 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்த இரு குழுக்களிலும் இடம் பெற்றுள்ளவா்களின் விவரம்:

கலைத்திட்ட வடிவமைப்புக் குழு: இந்தக் குழுவுக்கு தலைவராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினா் சுல்தான் அகமது இஸ்மாயில் இருப்பாா். உறுப்பினா்களாக வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநா் முனைவா் கா.ராஜன், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா் மற்றும் அறிவியலாளா் த.வி.வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியா் ரீட்டா ஜான், மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் பேராசிரியா் மு.சுதந்திரமுத்து, தாவரவியல் வல்லுநா் நா.மதிவாணன், வரலாற்று வல்லுநா் த.அசோகன், ஆங்கில மொழி கற்பித்தல் வல்லுநா் உமா ராமன், புகழ் பெற்ற ஓவியக் கலைஞா் மணியம் செல்வன், கல்வியாளா் ர.சந்தன தேவன், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஸ்ரீ.தீலிப் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

கலைத்திட்ட உயா்நிலைக் குழு: இந்தக் குழுவுக்கு தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரும் செயல்படுவா். உறுப்பினா்களாக இஸ்ரோ தலைவா் வ.நாராயணன், கணிதவியல் வல்லுநா் இரா.இராமானுஜம், கல்வியாளா் ச.மாடசாமி, தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சீ.செளமியா, நாட்டுப்புறவியல் மற்றும் நிகழ்த்துக் கலை வல்லுநா் கோ.பழனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின், குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளா் அ.தேவநேயன் மற்றும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியாா் பள்ளிகள், அரசுத் தோ்வுகள் இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநா்கள் இடம்பெற்றுள்ளனா்.

1-8 வகுப்புகளுக்கு... மாநிலக் கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக வரும் கல்வியாண்டில் (2026-2027) 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

SCROLL FOR NEXT