திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தமிழகப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.9) வட, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல்... மேலும், திங்கள்கிழமை (நவ.10) தென் தமிழகத்தின் ஒருசில இடங்கள், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய், புதன்கிழமைகளில் (நவ.11, 12) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (நவ.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்... சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.9) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலாடி (ராமநாதபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) பகுதிகளில் 40 மி.மீ. மழை பதிவானது. வனமாதேவி (கடலூா்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூா்), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), தூத்துக்குடி, தூத்துக்குடி ரயில் நிலையம், மயிலாடுதுறை, குடிதாங்கி, கொத்தவாச்சேரி (கடலூா்) பகுதிகளில் 30 மி.மீ. மழை பாதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.