திமுக ஒரு கட்சியே அல்ல, கார்ப்பரேட் கம்பெனி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு என்ன சாதனை படைத்தது? அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, முடிக்கப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதைவிட, நீங்கள் வேறு என்ன சாதனை செய்திருக்கிறீர்கள்?
நான்கரை ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு விட்டது. ஆனால், நான்கரை ஆண்டுகளில் துறைகள்வாரியாக லஞ்ச ஊழல் நிறைந்து விட்டது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது.
இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான் என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை; குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வர்தான் தற்போதைய முதல்வர். திமுக என்றால் குடும்பம்; குடும்பம் என்றால் திமுக. அது ஒரு கட்சி அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. தமிழகத்தில் குடும்ப ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு 4 முதல்வர்கள் இருக்கின்றனர்; 4 அதிகார மையங்களும் இருக்கின்றன. ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி ஸ்டாலின், மூன்றாவது ஸ்டாலினின் மனைவி, நான்காவது மக்களுக்கே தெரியும்.
உதயநிதி ஸ்டாலினும் சபரீசனும் கைகளில் ரூ. 30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் தடுமாறுவதாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டதாக ஆடியோ ஒன்று வைரலானது. ஆனால், அந்த ஆடியோ குறித்து முதல்வர் இதுவரையில் மறுப்பு எதுவும் கூறவில்லை.
இதனை எதிர்க்கட்சிகள் சொன்னால், அது திட்டமிடப்பட்டது. ஆனால், திமுக அமைச்சர் சொல்கிறார் எனில், அது உண்மைதானே’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார்- அமைச்சர் துரைமுருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.