கிழிக்கப்பட்ட கொசுவலையுடன் கூடிய கூடாரம். 
தமிழ்நாடு

ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு!

ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்கப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தையை, காவல் துறை நாமக்கலில் மீட்டுள்ளது.

கடந்த அக். 16 ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்தவர் வெங்கடேஷ் (28). இவரது மனைவி கீர்த்தனா (22). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் வந்தனா எனும் பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள், குடும்பத்துடன் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பிரிவில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே தங்கி, துடைப்பம் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுடன் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கியுள்ளனா்.

வழக்கம்போல தங்கள் குழந்தைகளுடன் கொசுவலைக்குள் வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதி புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் வெங்கடேஷ் எழுந்து பார்க்கையில் கொசுவலையின் ஒரு பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. மேலும், குழந்தை வந்தனாவை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த இருவரும் அப்பகுதியில் தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் ஈரோடு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் நேரில் விசாரணை நடத்தினார். சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அக். 16 ஆம் தேதி அதிகாலையில் அவ்வழியே நடந்து வந்த மர்ம நபா் ஒருவர், கொசுவலையைக் கிழித்து குழந்தையை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

பெண் குழந்தை கடத்தல் வழக்கில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் சென்ற 120 வாகனங்களின் எண்களை கொண்டும், இந்த வழக்குகளில் தொடர்புடைய 41 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அப்பகுதியில் 33 இடங்களில் உள்ள 120 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே, 7 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நாமக்கலில் குழந்தையை இன்று(நவ. 10) காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

குழந்தையை கடத்தியவரும் வாங்கியவரும் கொடுமுடி பகுதியில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், குழந்தையைக் கடத்தியதாக ரமேஷ் என்பவரை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The police have rescued a one-and-a-half-year-old girl who was abducted from the Siddhud area of ​​Erode district in Namakkal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் தீவிர கண்காணிப்பு!

தில்லி சம்பவம்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தில்லியில் கார் வெடித்து விபத்து: 10 பேர் பலி, பலர் காயம்

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: 10 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?

SCROLL FOR NEXT