வயிற்று பிழைப்பிற்காக அரசின் மீது அவதூறுகளை பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
”குகை கோயில்கள் - கல்வெட்டுகள் - தொல்லியல் சின்னங்கள் என்று நிறைந்து சோழர் - பாண்டியர் - முத்தரையர் - தொண்டைமான்களால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற புதுக்கோட்டை மண்ணில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த அடைகிறேன்!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், மொழிப்போர் பெரும் முக்கியத்துவம் கொண்டது. அந்த மொழிப்போரில் உயிரைத் தந்து தமிழ் காத்த இரண்டு தியாகிகள் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து. இந்த இரண்டு பேரையும் மறக்க முடியுமா! “ஹிந்தியை நிறுத்துங்கள்”-என்று அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கும், “தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்” என்று பேரறிஞர் அண்ணாவிற்கும் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு உயிர்நீத்தார், கீரனூர் முத்து அவர்கள்!
நம் உயிரோடு கலந்து, நம்மை இயக்கிக் கொண்டிருக்கக்கூடிய நம் தாய்மொழியான தமிழ்மொழியைக் காக்க நஞ்சுண்டு இறந்தார், விராலிமலை சண்முகம்! அந்த தியாகச் சீலர்களின் நினைவைப் போற்றும் விதமாக, 1967-இல் கீரனூரில் “கீரனூர் முத்து சீரணி அரங்கமும்”, திருச்சி பாலக்கரையில் கட்டப்பட்ட பாலத்திற்கு, 2006-இல், கீழப்பழுவூர் சின்னச்சாமி – விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக, “சின்னச்சாமி - சண்முகம் பாலம்”-என்று பெயர் வைத்தவர், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்!
புதுக்கோட்டைக்கு எத்தனையோ சிறப்புகள் – பெருமைகள் இருந்தாலும், அதில் முக்கியமானது என்னவென்று கேட்டீர்கள் என்றால், இந்த புதுக்கோட்டை மாவட்டம், தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம்!
1974-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை என்ற புதிய மாவட்டத்தை தலைவர் கலைஞர் உருவாக்கினார். இந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் அரசு விழாவை புதுமையாக நடத்திக் காட்டி இருக்கிறார் நம்முடைய மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ரகுபதி. சட்ட அமைச்சராக இருந்த அவர், இப்போது கனிமவளத்துறை அமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலனுக்காக ஏராளமான முன்னோடி திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர வைத்து, பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு மீது பலரும் அரசியல் இலாபங்களுக்காக – வயிற்று பிழைப்பிற்காக நாள்தோறும் அவதூறுகளை பரப்புகிறார்கள்.
அப்படி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு முதல் ஆளாக ஊடகங்களுக்கு முன்பு வந்து, எதிர்வாதங்களை வைக்கக் கூடியவராக – பதிலடி கொடுப்பவராக இருப்பவர்தான், நம்முடைய ரகுபதி! தன்னுடைய ஆழமான – ஆணித்தரமான வாதங்களின் மூலமாக ஆட்சியைக் காக்கும் அரணாக விளங்குகிறார்! அவருக்கு உங்களுடைய அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகள்!” என்றார்.
இதையும் படிக்க: மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.