மகளிருக்கான நடமாடும் மருத்துவப் பரிசோதனை ஊர்தியை பார்வையிட்ட முதல்வர். DIPR
தமிழ்நாடு

புற்றுநோய், இதய நோய், நீரிழிவு... மகளிருக்கு நடமாடும் மருத்துவப் பரிசோதனை ஊர்தி! காஞ்சியில் தொடக்கம்!!

மகளிருக்கான நடமாடும் மருத்துவப் பரிசோதனை ஊர்தி சேவை...

இணையதளச் செய்திப் பிரிவு

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ்,
மகளிர் நல்வாழ்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும்
மருத்துவ ஊர்தியை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி கருவி, செமி-ஆட்டோஅனலைசர் (Semi-autoanalyser) உட்பட பல வசதிகளுடன் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை முதல்வர் பார்வையிட்டார்.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,  நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நலவாழ்வு பெறவேண்டும் என்கிற உயரிய நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்திடும் “மக்களைத் தேடி மருத்துவம்”, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சிறப்பு மருத்துவ சேவைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. 

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 48 பல் மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 2,810 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,413 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 555 உதவியாளர் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 187 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 314 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

பணி நியமன ஆணைகள் வழங்குதல்

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக 196 உதவியாளர்கள் பணியிடத்திற்கும், குடும்ப நல இயக்ககத்தின் கீழ் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும்,  மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து இயக்ககத்தின் கீழ் 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்– II) பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், என மொத்தம் 233 நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியை பார்வையிடுதல்

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  பெண்களுக்கு ஏற்படும் மூன்று முக்கிய புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சர் பார்வையிட்டார். 

இத்திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியின் மூலம்,  பெண்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மூன்று முக்கிய புற்றுநோய்களான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் பிற முக்கிய நோய்களான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இருதய நோய்கள் போன்றவற்றிற்கான பரிசோதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி(ECG) கருவி, செமி-ஆட்டோஅனலைசேர்
(Semi-autoanalyser) உட்பட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாகனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, மேலும் 37 வாகனங்கள் 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்

"மகளிர் நலமே சமூக நலம்!

இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காஞ்சியில் தொடங்கும் இந்தத் திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும்.

மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

A mobile medical screening vehicle for women in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இவரா அவர்?... எதிர்நீச்சல்... காயத்ரி!

நவ. 19-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வேட்டுவம் கிளைமேக்ஸுக்கு காத்திருக்கும் ஆர்யா!

தமிழகம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி என்பது உண்மையல்ல: துரைமுருகன்

SCROLL FOR NEXT