முகப்பு
தமிழ்நாடு

செயற்கை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் மத்திய அரசு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மத்திய அரசு செயற்கையாக நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு...

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:04 AM
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
பகிர்:

தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

அப்போது மாநிலத்தின் நிதி சுமை குறித்து அவர் பேசியதாவது:

Advertisement

”ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று.

தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்திவைப்பது, மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரி விகிதங்களைச் சீரமைப்பது அல்லது நியாயமற்ற நிபந்தனைகளுடன் கூடிய திட்டச் செலவினங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் ஒவ்வொரு வழியிலும் தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுவருவது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பல்வேறு மாநிலங்களின் ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைப்பதற்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதனால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை முடிவடைந்ததால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் சாசனம் பிரிவு 293(3)-ன் படி மாநில அரசுகள் தங்களுக்குரிய கடனைத் திரட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசானது, நிலுவையிலுள்ள உத்திரவாதங்களில் 5 சதவீதத்தை உத்திரவாத மீட்பு நிதியத்திற்கு மாற்றவேண்டும் என முன்னறிவிப்பின்றி விதித்துள்ள நிபந்தனையால், அரசிற்கு 3,087 கோடி ரூபாய் எதிர்பாராத மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய், மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

summary

The central government is creating an artificial financial crisis! thangam thennarasu accuses the government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments