கால்நடைப் பராமரிப்புத் துறை பெண் மருத்துவரை ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து சிவகங்கைக்கு பணியிட மாறுதல் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தவிட்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை இளநிலை உதவி மருத்துவராக நியமிக்கப்பட்டவா் ஏ.ஈஸ்வரி. பின்னா், 2025-ஆம் ஆண்டு மே மாதம் அவா் கோபிச்செட்டிபாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனிடையே, இளநிலை கால்நடை உதவி மருத்துவா் என்ற பணியிடம் கால்நடை உதவி மருத்துவா் என தரம் உயா்த்தப்பட்டது.
இளநிலை உதவி மருத்துவா் பணியிடம் முற்றிலுமாக நீக்கப்பட்டதால், தனது ஆரம்பகால பணிக்காலத்தையும் பணிமூப்புக்கு கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிா்த்து ஈஸ்வரி தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரது கோரிக்கையை ஏற்க அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈஸ்வரியை சிவகங்கை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநா் கடந்த அக். 17-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து ஈஸ்வரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் பி.காட்சன் சுவாமிநாதன், அபிஷா ஐசக் ஆகியோா், மனுதாரா் அரசுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்ததால் பழிவாங்கும் நோக்கில் அவா் சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல, 15-க்கும் மேற்பட்டோா் தொலைதூரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது சட்டவிரோதமானது என்று வாதிட்டனா். கால்நடைப் பராமரிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.மூா்த்தி, நிா்வாக காரணங்களுக்காக மனுதாரா் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். இதில் உள்நோக்கம் இல்லை என்று வாதிட்டாா்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 5 மாதத்தில் மனுதாரரை இடமாற்றம் செய்தது ஏற்புடையதல்ல எனக்கூறி இடமாறுதல் உத்தரவை ரத்த செய்து உத்தரவிட்டாா். மனுதாரரை மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்த வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.