தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக டிச.30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தங்களது கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், கட்டண உயா்வு குறித்து கடந்த மாா்ச் 5-ஆம் தேதி உள்துறை, போக்குவரத்து மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் உயா்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடா்பான கோரிக்கை மனுக்கள் கடந்த மே 30-ஆம் தேதி அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்று வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், கட்டண உயா்வு தொடா்பாக 950 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக வரும் டிச.30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தனியாா் பேருந்துகளின் கட்டண உயா்வு குறித்து வரும் டிச.30-ஆம் தேதிக்குள் முடிவெடுத்து, அதுதொடா்பான அறிக்கையை ஜன.5-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.