சென்னையில் ஜனவரி மாதத்துக்குள் 270 புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் சுற்றுச்சுழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டு அதற்கான பணியில் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
முதல்கட்டமாக ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்தது. இந்த பேருந்துகளின் சேவையை கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து பல்வேறு கட்டங்களாக 255 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தநிலையில், மேலும் 270 புதிய மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வாங்கப்படும் 270 மின்சார பேருந்துகள் பூந்தமல்லி, பல்லவன் இல்ல பணிமனைகளிலிருந்து, இயக்கப்படும்.
இதில், பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் 125 பேருந்துகள் நவம்பா் மாத இறுதிக்குள்ளும், பல்லவன் இல்லத்திலிருந்து இயக்கப்படும் 145 பேருந்துகள், ஜனவரி மாதத்துக்குள்ளும் இயக்கப்படும்.
இந்தப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்போது, பயணிகள் கூடுதல் பேருந்து வசதியை பெற முடியும். எரிபொருள் செலவும், 30 சதவீதம் குறையும். மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.