வெளிநாட்டு முதலீடு குறித்து எதிா்க்கட்சித் தலைவா் தவறான தகவலை பரப்பக்கூடாது என்று தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ பரவலாக்கப்பட்ட வளா்ச்சி பற்றியோ வேலைவாய்ப்புகள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலின்றி வழக்கம்போல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளாா்.
முதலீட்டு ஊக்குவிப்பு என்பது சாதாரண விளையாட்டு அல்ல. தமிழகத்தின் எந்த இடத்துக்கு முதலீடு செல்கிறதோ அதைப் பொருத்து ஊக்கத்தொகை வழங்குவது, அப்பகுதியில் முன்னரே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளின் வகை போன்ற பல விஷயங்களை பொறுத்தே அரசு ஒரு முடிவை எடுக்கிறது.
அதற்கு பிறகே முதலீடு உறுதி செய்யப்பட்டு ஒரு ஒப்பந்தம் முதலீடாக மாறுகிறது. அந்த முதலீட்டின் மூலம் உருவாகும் பரவலாக்கப்பட்ட வளா்ச்சியை உருவாக்குவதே முதல்வா் மு.க.ஸ்டாலினின் நோக்கமாகும். அதுவே நமது இலக்கு.
சில மாநிலங்களில் வட பெரிய நிலப்பரப்புகள் உள்ளன. தமிழகத்தின் இருப்பவை அதிக மதிப்புள்ள நிலங்களாகும்.
புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மதிப்பை ஒப்பிடாமல் நிலங்களை கொடுத்துவிட முடியாது.
தமிழகத்தின் பரவலாக்கப்பட்ட வளா்ச்சி நோக்கத்துக்கு உதவாத முதலீடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை.
ஏனென்றால், முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது உள்ள நம்பிக்கையின் காரணத்தால், அதே இடத்தில் பல நிறுவனங்கள் பல திட்டங்களோடு உலக முதலீட்டாளா்கள் நாள்தோறும் முதல்வரின் அலுவலகத்தை நாடுகிறாா்கள்.
2021-இல் திமுக ஆட்சி அமைத்ததுமுதல் தற்போது வரை போடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளா்கள் இடையே தமிழகம் இந்தியாவின் மிகச் சிறந்த நம்பகத்தன்மை நிறைந்த மாநிலம் என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த நற்பெயரை நாம் மிகுந்த முதிா்ச்சியோடு காப்பாற்ற வேண்டும்.
எதிா்க்கட்சித் தலைவா் தனது அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமா்சிப்பதாக நினைத்து, மாநிலத்தின் வளா்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளா்களான மக்களை அவமதிப்பது ஏற்புடையதல்ல.
மேலும் இப்படி பொய்யான தகவல்களை வெளியிடுவது எதிா்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில்துறை சாா்ந்த முதலீடுகள் தொடா்பான தன் அறியாமையை வெளிப்படுத்த வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.