சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணிநியமன ஆணைகளை பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாக உள்ள ஒரு துணை மேலாளா்(தர உறுதி), ஆறு விரிவாக்க அலுவலா் நிலை- 2, ஐந்து தொழில்நுட்பா் (இயக்குபவா்), ஒரு தொழில்நுட்பா்(ஆட்டோ மெக்கானிக்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தகுதியான 13 போ் அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்த 13 நபா்கள், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட ஒரு நபா் என மொத்தம் 14 நபா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, தோ்வுசெய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைச் செயலா் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஏ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.