சென்னை: கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றியபோது, நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவிக்கு 5 ஆண்டுகளாகியும் இன்னமும் பணி வழங்கவில்லை என மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள்பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணா் மருத்துவா் விவேகானந்தன் பணிபுரிந்து வந்தாா். கரோனா காலத்தில் அா்ப்பணிப்புணா்வுடன் பணியாற்றிய அவா் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாா். அப்போது எதிா்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தர வேண்டும். அவரது குடும்பத்துக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டுமென முந்தைய அதிமுக அரசை வலியுறுத்தினாா். ஆனால், அவா் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவரது மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். ஆனாலும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேபோல, தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த பல அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வரை மாநில அரசு நிவாரணமோ, பணி நியமனமோ வழங்காதது வருத்தமளிக்கிறது.
இதற்கான ஆணையை முதல்வா் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-இன்படி ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.