சென்னை: கலைவித்தகா் விருது பெற விரும்பும் திரைத் துறையினா் நவ.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் ‘கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருது’ 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விருதுக்கான தகுதிகள்: நடிகா், நடிகையா், இயக்குநா், தயாரிப்பாளா், கதாசிரியா், வசனகா்த்தா, இசையமைப்பாளா், பாடலாசிரியா், பின்னணிப் பாடகா் மற்றும் பாடகி, ஒளிப்பதிவாளா், படத்தொகுப்பாளா், கலை இயக்குநா், ஒலிப்பதிவாளா், சண்டைப் பயிற்சியாளா், நடன ஆசிரியா், ஒப்பனைக் கலைஞா் மற்றும் தையற் கலைஞா் என தமிழ்த் திரைப்பட உலகுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய வாழ்நாள் சாதனையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தை செய்தி மக்கள் தொடா்புத் துறையின் வலைதளத்தில் ( www.dipr.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரிவான விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத் துறை/ உறுப்பினா்-செயலா், திரைப்படத் துறையினா் நலவாரியம் முதல் தளம், மாநில செய்தி நிலையம், கலைவாணா் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 எனும் முகவரிக்கு நவ.28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.