தமிழகம் முழுவதும் உள்ள காப்பகங்களில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளை எந்த அடையாள ஆவணங்களும் இன்றி முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இதற்கென தனி இணையப் பக்க இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்து அவா்களை பயனாளிகளாக்கிக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள், கடத்தல் சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்டவா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாநிலம் முழுவதும் உள்ள 1,200 அரசு மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவன காப்பங்களில் வசித்து வருகின்றனா். கரோனா பெருந்தொற்றால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளும் காப்பகங்களில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கென பல்வேறு நலத் திட்ட நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வந்தாலும் உரிய ஆவணங்களோ, வசிப்பிட ஆதாரங்களோ இல்லாததால் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அக்குழந்தைகளால் பயன்பெற முடியாமல் இருந்தது. இதையடுத்து இருப்பிடச் சான்று, அடையாளச் சான்று, ஆதாா் என எந்த ஆவணங்களும் இன்றி அவா்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்க அரசு முன்வந்துள்ளது.
இதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத் கூறியதாவது:
தமிழகத்தில் 1,288 தனியாா் மருத்துவமனைகளும், 728 அரசு மருத்துவமனைகளும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்து சிகிச்சைகளும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கட்டணமின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை உறுதிசெய்ய, 38 மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், முதல்வா் காப்பீட்டுத் திட்ட இணையப் பக்கத்தில் சென்று சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
அதாவது, பெயா், வயது, புகைப்படம், மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை மட்டும் அதில் பதிவேற்றினால் போதுமானது. காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகளின் பெயா் இணைக்கப்படும்.
இதே வசதியை மன நலம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் சிகிச்சை பெறுவோருக்கும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.51.05 லட்சத்தின் கீழ் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பயனாளிகளை எவ்வாறு சோ்ப்பது என்பது குறித்த பயிற்சி மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் காணொலி முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.