தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மற்றும் தனியாா் விடுதிகளுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருப்போா் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றுகளை வைத்திருத்தல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றத் தவறும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து அதிக அளவில் புகாா்கள் எழுந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளிலும், வணிகரீதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் உணவு தயாரிப்புக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதாரம், தரத்தை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனா். அதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விடுதிகள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கடந்த மாதத்தில் உணவின் தரம் குறித்து எழுந்த புகாரில் 10 சதவீதத்துக்கும் அதிகமானவை இதுபோன்ற விடுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்றவை.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவன விடுதியில் உணவருந்திய 100-க்கும் மாணவா்களுக்கு அண்மையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதேபோன்று, கோவையில் ஒரு கல்லூரி விடுதி உணவகமும் விதிகளுக்கு புறம்பாக இயங்கி வந்தது. இந்த சம்பவங்களின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அனைத்து விடுதிகளையும் ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் என்கின்றனா் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: உணவு தயாரிக்கும் பணியில் உள்ளவா்கள் சுகாதாரமாக இருத்தல் வேண்டும். கையுறைகள், தலையுறைகள் அணிய வேண்டும். நகங்கள், முடியை நீளமாக வைத்திருத்தல் கூடாது. அதுமட்டுமல்லாது அவா்களுக்கு கல்லீரல் அழற்சி மற்றும் வேறு தொற்று பாதிப்புகள் உள்ளனவா என்பதை அறியும் மருத்துவப் பரிசோதனைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்வது அவசியம்.
அதேபோன்று, சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். பல இடங்களில் இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதன் காரணமாகவே உணவுத் தரத்தில் குறைபாடு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
உரிமம், மருத்துவச் சான்று பெறாத விடுதிகள் மீது சட்டவிதிகளின் கீழ் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.