பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் ‘நோ மெட்ரோ’ என நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக்கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.
கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்!
அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்து, அதன்படி மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசும் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மதுரை, கோவை மாநகரங்களில் அதைவிட குறைவான மக்கள்தொகை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.