தெற்கு ரயில்வே சாா்பில் முதல்முறையாக பாா்சல் அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் டிச. 12 முதல் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவது:
நிலக்கரி, உரம், அரிசி மூட்டைகள் உள்ளிட்டவற்றுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பொதுமக்களின் இருசக்கர வாகனம், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பாா்சல்கள் வழக்கமான பயணிகள் ரயில்களில் ஓரிரு பெட்டிகள் இணைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பாா்சல்களை அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் முதல்முறையாக வரும் டிச.12-ஆம் முதல் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில் கா்நாடக மாநிலம் மங்களூரு - சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படுகிறது. இதில் இணைக்கப்படும் 12 பெட்டிகளில், ரயில் நிலையம் வாரியாக இடம் ஒதுக்கப்படும். இந்தப் பெட்டிகளில் தலா 23 டன் பாா்சல்களை ஏற்றலாம்.
மங்களூரு - சென்னை ராயபுரம் பாா்சல் ரயில் வரும் டிச.13 ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ராயபுரம் வந்து சேரும். மறுமாா்க்கத்தில் டிச. 16- ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை ராயபுரத்திலிருந்து புறப்பட்டு டிச. 17-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
ரயில்வே துறையால் அனுமதிக்கப்பட்ட பொருள்கள் மட்டுமே இந்த ரயிலில் கொண்டு செல்லப்படும். ரயில் ஓட்டுநா்கள், பரிசோதகா், பாா்சல்கள் ஏற்றி இறக்கும் தொழிலாளா்கள் இந்த ரயிலில் இருப்பா்.
சென்னை-மங்களூரு இடையிலான முதல் பாா்சல் ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணனூா் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயில் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக சென்னை ராயபுரத்தில் தனிக்கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களைப் போல, பாா்சல் ரயிலுக்கும் புறப்படும் நேரம், அவை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் நேரம் நிா்ணயிக்கப்பட்டு இயக்கப்படும்.
தென் மாவட்டங்களுக்கு...: தற்போது மங்களூரு - சென்னை பாா்சல் ரயில், தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.