சேலம்: சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், பல்வேறு காரணங்களால், தவெக கூட்டத்துக்கு டிசம்பர் 4ஆம் தேதி அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி முதன் முறையாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளார்.
கட்சி தொடங்கியது முதலே மாநாடுகள் மூலமாக மட்டுமே மக்களை சந்தித்த விஜய் கடந்த செப்டம்பர் 13ம் தேதி முதல் திருச்சியில் இருந்து பிரசாரப் பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களை சந்தித்து உரையாற்றி வந்தார்.
தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து அவரின் பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரப் பயணம் மீண்டும் துவங்கப்படும் என கட்சி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் டிசம்பர் 4-ம் தேதி சேலம் கோட்டை வளாகம், போஸ் வளாகம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் விஜய் மக்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பிரசாரத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இன்று சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் டிசம்பர் நான்காம் தேதி சேலத்தில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு மனு வழங்கியுள்ளனர்.
ஆனால் டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள்,
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபடுவார்கள்.
இதன் காரணமாக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ள தேதியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.