வாரம் ஒரு அரசுப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுவதும், சுவர் இடிந்து விழுவதுமாக இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகிலுள்ள விளாங்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள், செயல்பாட்டுக்குத் தகுதியே இல்லாத, மிக மிக ஆபத்தான நிலையில், மேற்கூரைகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மழை பெய்யும்போதெல்லாம், மேற்கூரை ஒழுகும் நிலையில் இருக்கிறது.
சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கு, புதிய கட்டிடங்கள் கட்டவோ, மாற்று இடம் அமைக்கவோ, பள்ளிக் கல்வித்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளியின் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. எத்தனை ஆபத்தான நிலையில் இந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன், பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டித் தருவோம் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும், இதுவரை எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று பல முறை கேள்வி எழுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்காமல் இருக்கிறார்கள். வாரம் ஒரு அரசுப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுவதும், சுவர் இடிந்து விழுவதுமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ஒரு கேள்வி. உங்கள் வீட்டுக் குழந்தைகளை, இப்படிப்பட்ட கட்டடத்தில், கல்வி பயில அனுப்புவீர்களா? தெரிந்தே நமது குழந்தைகளை இத்தனை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.