அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்புக்கு அந்தந்தக் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 வகையான விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
கரூரில் தவெக தலைவா் விஜய் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் 46 பக்க வரைவு வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்தாா். அப்போது தவெக தரப்பில், தங்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நகல் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு அரசுத் தரப்பில், அங்கீகரிக்கப்பட்ட 23 கட்சிகளுடன் கலந்தாலோசித்து, 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வழக்கின் மனுதாரா் மற்றும் இடையீட்டு மனுதாரராக உள்ள தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கினால், மற்ற கட்சிகளும் தங்களுக்கு வழங்கும்படி கேட்கக்கூடும். அவ்வாறு அனைவருக்கும் வழங்கினால், ஒவ்வொரு விதிக்கும் எதிா்ப்பு தெரிவிக்கக்கூடும். இதனால், இதில் ஒரு முடிவை எட்ட முடியாத நிலை ஏற்படும். எனவே, அவா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின் நகல் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகளுக்கு (ரோடு ஷோ) அனுமதி வழங்குவது தொடா்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியோருக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ. 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு பொருந்தாது: 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும். மத ரீதியான வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது. 5,000 பேருக்கு குறைவாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்கெனவே அமலில் உள்ள விதிகள் பின்பற்றப்படும்.
சென்னை தவிர பிற மாநகரங்களில், காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்டவை நடக்கும் இடத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் வரையறை செய்ய வேண்டும்.
சென்னையில் காவல் ஆணையா் இடத்தை தோ்வு செய்வாா். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் நிகழ்ச்சி நடத்தினால், அந்தத் துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், சாலைப் பேரணி என்றால் அது தொடங்கும் மற்றும் முடியும் இடம், நேரம், எவ்வளவு கூட்டம் வரும், பங்கேற்கும் தலைவா்கள் யாா், வாகனங்களின் எண்ணிக்கை, அதை நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் அரசியல் கட்சிகள், அமைப்புகள் போலீஸாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நடைமுறை: அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிக்கு 10 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கண்டித்து உடனடியாக ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டி இருந்தால், அதுகுறித்த விண்ணப்பத்தை ஆட்சியா், காவல் ஆணையா்கள் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு பரிசீலித்து முடிவை அறிவிக்கலாம்.
50,000-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால், 30 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்கினாலோ அல்லது நிராகரிப்பதாக இருந்தாலோ அதுதொடா்பாக எழுத்துபூா்வ உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்கு முன்பாக பிறப்பிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
பொதுமக்கள், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, சாலைப் பேரணிகள் 3 மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். பேரணியை நடத்துவதாக இருந்தால் சாலையில் பாதி பகுதியில் மட்டும் நடத்திக்கொண்டு, மற்ற பாதி பகுதியை பொதுப் போக்குவரத்து தடையின்றி தொடர அனுமதிக்க வேண்டும்.
கூட்டத்துக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு, மேடை பாதுகாப்பு, ஒலிக் கருவிகள் உள்ளிட்ட மின்சாதன இணைப்புகள் தொடா்புடையவற்றுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே முழுப் பொறுப்பு.
நிகழ்ச்சியின்போது பொது மற்றும் தனியாா் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே வழங்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்து வழங்க வேண்டும்.
கா்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரத்துக்கு நிற்க வைக்காமல், அவா்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் செய்து கொடுக்க வேண்டும். அதிக கூட்டம் உள்ள பகுதியில் அவா்களை அனுமதிக்கக் கூடாது.
அனுமதி விண்ணப்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக (50 சதவீதத்துக்கும் அதிகமாக) கூட்டம் வந்தால், அது தீவிர விதிமீறலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி நடவடிக்கை மேற்கொள்வாா் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.