கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொதுக்கூட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்யக் கோரி தவெக வழக்கு

வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணி (ரோடு ஷோ) உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவா் விஜய், கலந்துகொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இதுதொடா்பாக, கடந்த ஜன. 5-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் சாா்பில், கட்சியின் வழக்குரைஞா் எஸ்.அறிவழகன் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், அரசியல் கட்சிகளாக தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள பல நிபந்தனைகள் நடைமுறையில் பின்பற்ற முடியாத, சாத்தியமற்ாக உள்ளன. இதனால் கட்சி நிகழ்வுகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை உருவாகும். குறிப்பாக, அரசின் பொறுப்புகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் மீது வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளில் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சமமான பொறுப்புகள் இருக்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக தவெக சாா்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பினா் கருத்துகளையும் கேட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

87 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று வரலாறு படைத்த அல்கராஸ்!

தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி.

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்தப் பொருள்களின் விலை குறையும்?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை! | Nirmala Sitharaman |

ஈரானுடன் வர்த்தகம் வேண்டாம்: வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும்! - டிரம்ப்

SCROLL FOR NEXT