கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மீனவர்களுக்கு புதுச்சேரி அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மீனவ பெருமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில் 24-11-2025 தேதியிட்ட இந்திய அரசின், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி 25-11-2025 அன்று முதல் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (24-11-2025) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் எவரேனும் அக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருப்பின் அவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விசைபடகு உரிமையாளர்கள் நலக்கங்கம், தேங்காய்திட்டு, எஃப்ஆர்பி பைபர் போட் உரிமையாளர்கள் சங்கம், தேங்காய்திட்டு, மீனவ கிராம பஞ்சாயத்து / கோவில் நிர்வாக குழுக்கள் / மக்கள் குழுக்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள படகு உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்து இதுபோன்ற மழை மற்றும் கடல் சீற்றகாலங்களில் அவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு செய்திட வேண்டுமென இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிக்க | நவ. 29-ல் சென்னை, புறநகர் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.