வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் தற்போது நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரங்கள், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில தினங்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழை பொழிவு காரணமாக எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் அதன் காரணமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மதுரை மண்டல பொறியாளருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
மேலும் மதுரை மண்டலத்தில் வெள்ள தடுப்பிற்காக செயல்படுத்தப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ள பின்னர் உள்ள வெள்ள நிலைமைகள் குறித்தும் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நீர்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாலும் தாமிரபரணியில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் எதிர்வரும் மழைப்பொழிவினை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பொறியாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள், காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்தில் வடிகால்களில் தடையில்லாமல் நீர் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை விரைவு படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
வரும் வாரங்களில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், செயலாளர் அவர்கள் இந்த வாரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய கோரினார்.
பெரும் வெள்ளம் ஏற்பட்டால், நிலைமையை துரிதமாக சமாளிக்கவும், கண்காணிக்கவும், பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் ஏதுவாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா ஆகிய பகுதிகளுக்கென்று தனித்தனி குழுக்களை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் பெரும்மழை பொழிவினை கணக்கிற்கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளின் நீர் இருப்பில் முழுக்கொள்ளளவிலிருந்து 10% முதல் 20% வரை கொள்ளளவினை குறைத்து வைத்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டலப் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், எதிர்பாராத வகையில் நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பதற்கு ஏதுவாக, தேவையான JCB போன்ற கனரக இயந்திரங்களையும், மணல் மூட்டைகளையும் இருப்பில் வைத்துக்கொள்வதை அனைத்து மண்டல தலைமைப்பொறியாளர்களும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.