ஒரே நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு புயல் சின்னமும், அந்தமானுக்கு கிழக்கே ஒரு புயல் சின்னமும் உருவாகியிருப்பதால் வானிலை தொடர்பான சில குழப்பங்கள் நீடிக்கிறது.
அதாவது, இலங்கை - மன்னார்வளைகுடா -குமரி கடல் பகுதியில் முதல் காற்றழுத்த தாழ்வு உருவானது. வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான முதல் காற்றழுத்த நிலை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, சில மணி நேரங்களில் மேலும் வலுப்பெற்று இது மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாகவே, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று வரை கனமழை பதிவாகியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. எப்போது மழை நிற்கும் என்று ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள், 2023ஆம் ஆண்டு போல மிகப்பெரிய வெள்ள அபாயத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆனால், இன்று முதலே படிப்படியாக வரும் நாள்களிலும் தென் மாவட்டங்களில் மழை குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால், அடுத்து புயல் சின்னமாக வலுப்பெறும். இது மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலில் புயலாக உருவாகலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது புயலாக உருவாகாது என்று தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், இந்த புயல் சின்னத்தின் காற்றுக் குவியல் இலங்கை மீது விழும். இதனால் டெல்டா பகுதிகளில் படிப்படியாக மழை குறையும். இலங்கைக்கு கனமழை வாய்ப்பிருக்கிறது. இது புயலாக வலுப்பெறும்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.
வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக நவ. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து இரண்டாவது 2வது புயல் சின்னம்
அந்தமானுக்கு கிழக்கே, மலக்கா ஜலசந்தியில் இரண்டாவது காற்றழுத்த நிலை உருவாகியிருந்தது. அது இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. மலாக்கா அருகே உருவானாலும், இது அந்தமான் நோக்கி நகராமல் அங்கேயே நீடிக்கிறது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. ஆனால், இது புயலாக மாறாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் உருவாகுமா?
இலங்கைக்கு அருகே இருக்கும் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவினாலும், இன்று காலை நிலவரப்படி, இது புயலாக மாறாது என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுபோல அந்தமானுக்கு கிழக்கே உள்ள தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக உருவாவதற்கான சாதகம் இல்லை. இது கடலிலேயே கரையும் வாய்ப்பு உள்ளது என்றே கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு மழை இருக்குமா?
சென்னைக்கு நவ. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நவ. 29ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஒரு புயல் சின்னம்
மூன்றாவதாக, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுவடைவதைப் பொறுத்து, அது புயல் சின்னமாக வலுப்பெறுமா என்பதை கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
முதல் புயல் சின்னம் குறித்து வானிலை ஆய்வு மைய தகவல்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (25-11-2025) காலை 0530 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது புயல் சின்னம் குறித்து வானிலை ஆய்வு மைய தகவல்!
நவ. 24ஆம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (25-11-2025) காலை 0830 மணியளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.
இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.