நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்துள்ளன.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில் இன்று(நவ. 25) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் இன்று(நவ. 25) கூறியுள்ளது.
முன்னதாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையால் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைகள் நிரம்பின. தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
நெல்லை டவுண், பாளையங்கோட்டை, மானூர், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திசையன் விளை ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியின் வீடு இடிந்து சேதம்:
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் கொண்டாநகரம் சீனிவாசகபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
கொண்டாநகரம், சீனிவாசகபுரத்தைச் சேர்ந்த மனோகர் (67) என்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவி மந்திரவடிவு (55) உடன் வசித்து வருகிறார். பீடி சுற்றும் தொழில் செய்து வரும் இவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.
கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 25) அதிகாலை சுமார் 5 மணி அளவில் கொண்டாநகரம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக, எதிர்பாராத விதமாக மனோகரின் வீடு திடீரென இடிந்து விழுந்தது.
வீடு இடிந்து விழுந்தபோது, மனோகரும் அவரது மனைவி மந்திரவடிவும் வீட்டிற்குள் இருந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வீடு இடிந்து விழுந்த தகவல் அறிந்த கொண்டாநகரம் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மழையால் சேதமடைந்த வீட்டின் விவரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.
மாற்றுத்திறனாளியான மனோகரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வரும் நிலையில், திடீரென வீட்டை இழந்ததால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக இவர்களுக்குப் போதுமான நிவாரண உதவியையும், புதிய வீடு கட்டிக் கொள்ள உரிய நிதி உதவியையும் வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கேட்டபோது வீடுகள் இடிந்து விழுவது குறித்து கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் வருவாய்த் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்றார். பழமையான வீடுகளின் பாதுகாப்பை வீட்டில் குடியிருப்பவர்கள் எப்போதும் உறுதி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.