விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
பின்னர், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் பேசினார். பின்னர் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக எடப்பாடி பழனிசாமியையும், தமிழர்களை வஞ்சிப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவியையும் விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் இருந்து வரியை மட்டும் வாங்கிக்கொண்டு, நலத் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்குவதில்லை என்று மத்திய அரசையும் விமர்சித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
தில்லியில் பல கார்கள் மாறி, யார் யாரையோ எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பிரதமரை சந்தித்து நெல் ஈரப்பதம் தொடர்பாக கோரிக்கை விடுத்தாரா? விவசாயிகளுக்காக பேச செல்கிறார் என்றால், நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன்.
பச்சைத் துண்டை அணிந்துகொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்வதாக விமர்சித்தபோது அவருக்கு கோபம் வந்தது. இப்போதும் சொல்கிறேன், எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு செய்தது துரோகம் மட்டுமே. மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொள்ளும் பழனிசாமி, ஈரோட்டிற்கு என்ன செய்தார்?
தமிழகத்தின் வளர்ச்சியை நிரந்தரமாகக் கெடுக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார், அவர்தான் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழர்கள் தேச விரோதிகள் என ஆளுநர் நினைக்கிறார். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை பயங்கரவாதிகள் உலவும் இடமாக சித்தரிக்க முயற்சிக்கிறார். ஆளுநர் இருக்கும் அரசியல் சாசன பொறுப்புகளுக்கு துளியும் பொருத்தமற்ற தகுதியற்ற செயல் இது.
கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் தொடங்கும் மசோதாவுக்கு அனுமதி தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். தமிழ் மொழியைப் பற்றி தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள்.
மத்திய ஆட்சியில் பஹல்காம் தாக்குதல், தில்லி குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால், தமிழ்நாடு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என பாஜக முடிவுடன் இருக்கிறது. வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு. ஆனால் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது கிடையாது. வடமாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அளுநரை நியமித்திருக்கிறது மத்திய அரசு என முதல்வர் பேசினார்.
இதையும் படிக்க | எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.