தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது ‘டித்வா’ புயல்! வட தமிழகம் நோக்கி நகர்கிறது!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று "டித்வா' புயலாக வியாழக்கிழமை உருவானது.

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று "டித்வா' புயலாக வியாழக்கிழமை உருவானது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.

புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 28) அதி பலத்த மழைக்கான "சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பி. அமுதா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வியாழக்கிழமை (நவ. 27) அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

புயலாக வலுப்பெற்றது: மேலும், அதே பகுதியில் இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு- வடகிழக்கே சுமார் 130 கி.மீ. தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 640 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வியாழக்கிழமை முற்பகல் டித்வா புயலாக வலுப்பெற்றது.

வடதமிழகம் நோக்கி...: இதைத் தொடர்ந்து, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (நவ.28) முதல் டிச. 3- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 28) அதிபலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு "சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு' எச்சரிக்கையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை 6 மாவட்டங்களுக்கு...: திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில இடங்களில் சனிக்கிழமை (நவ. 29) அதிபலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் (நவ. 30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்தார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT