2026ல் மக்கள் சக்தியால் தவெக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து நேற்று(நவ. 27) சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெகவில் இணைந்ததையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜய் படங்களுடன் அவரது கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. தனது வாகனத்தில் தவெக கட்சி கொடியையும் மாற்றியுள்ளார்.
பின்னர் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"கட்சித் தலைவரோடு விரைவில் கலந்துபேசி சுற்றுப்பயணம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தை புதிய இயக்கம் ஆள வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். மக்களால் நேசிக்கப்படுகிற தலைவர், புதிய ஆட்சி வர வேண்டும் என்ற நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
2026 மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமர்கிற காலம் உருவாகும்.
அதிமுகவில் இருந்து யார், யாரெல்லாம் தவெகவில் இணைவார்கள் என்று இப்போது கூறினால் பிரச்னை வரும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய்யின் தலைமையில் இந்த தமிழகம் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.