தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்று(நவ. 27) புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'டிட்வா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு இடையே நவ. 30 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டிட்வா புயல் பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில்,
"புயல் தற்போது இலங்கையின் மலைகளுக்கிடையே வலுவிழந்து காணப்படும் நிலையில் மீண்டும் கடலுக்குச் சென்றதும் வலுப்பெற முயற்சிக்கும். புயல் மேலே நகரும்போது இலங்கையில் கனமழை பெய்யும் கடைசி நாளாக இன்று இருக்கும். புயலால் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இலங்கையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள், நாகை மற்றும் தஞ்சாவூரின் தெற்குப் பகுதிகள், புதுக்கோட்டை கடலோரப் பகுதிகள் மற்றும் திருவாரூரில் கனமழை பெய்யும். மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், "கூகுள் ஏஐ மேப் கணிப்பு சொல்வது..
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நவம்பர் 29 ஆம் தேதி பிற்பகலில் இருந்து நவ. 30 ஆம் தேதி வரை மட்டுமே மழை பெய்யும். இந்த புயலால் சென்னைக்கு அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
கனமழை: 64.5 - 115.5 மிமீ (7 முதல் 12 செமீ)
மிக கனமழை: 115.6 - 204.4 மிமீ (12 முதல் 20 செமீ)
அதி கனமழை: ≥ 204.5 மிமீ (> 20 செமீ)" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.