முகப்பு
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ்!

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது பற்றி...

Updated On : 29 நவம்பர் 2025, 12:37 am IST
ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம்
பகிர்:

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் வழக்கம் போல அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவ.7-ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினா் சிறைபிடித்து, ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தனா். இதேபோன்று கா்நாடக போக்குவரத்து துறையும் 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளைத் தடுத்து, தலா ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நவ.7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகள் கடந்த 21 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, நவ.10-ஆம் தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாமல் கடந்த 18 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், தினசரி 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்ததுடன், உரிமையாளா்களுக்கு தினசரி சுமாா் ரூ.4 கோடி என 21 நாள்களில் மொத்தம் ரூ.84 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பாதிப்படைந்தனா்.

இதுதொடா்பாக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். இதனால், பயணிகள் நலனையும், ஐயப்பன் கோயில் பக்தா்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மீண்டும் வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவித்துள்ளாா்.