‘மருத்துவர் பணியிடங்கள் இல்லை: பல்நோக்கு மருத்துவமனைகளை திறப்பதில் சிக்கல்’!
தமிழகத்தில் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்காததால் புதிதாகக் கட்டப்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதாக அரசு மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்காததால் புதிதாகக் கட்டப்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதாக அரசு மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, காமராஜ் நகரில் செயல்பட்டு வருகிறது. அதற்கான மருத்துவமனை நகர்ப்பகுதியில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், 1,200 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பும் இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் ரூ.136.35 கோடியில் காமராஜ் நகரில் 7 மாடிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 687 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
பல்நோக்கு மருத்துவமனையாக அமைக்கவே அதன் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது மகப்பேறு, குழந்தைகள் நலனுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையாக அதை மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பல்நோக்கு மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், புதிதாக சுமார் 65 பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதனால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அதை தவிர்க்கவே இந்த மாற்றத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
ஏற்கெனவே வேலூரில் ரூ.198 கோடியில் பென்லேன்ட் பல்நோக்கு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, திறப்பு விழாவின் போது மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இதேபோல, சேலம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனையிலும் போதிய மருத்துவர் பணியிடம் உருவாக்கப்படாததால் தினந்தோறும் சேலம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இருந்து 8 மருத்துவர்கள் அங்கு மாற்றுப் பணிக்கு செல்கின்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையிலும் இதே நிலைதான். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 25 மருத்துவர்கள், 45 செவிலியர்கள் அந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காண்பதுடன் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி பல்நோக்கு மருத்துவமனைகளைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.