கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ் கரூர் நெரிசல் பலி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
விஜய்யின் விடியோ குறித்து, "கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்" என்றார்.
மேலும், "இன்றிற்க்கு பொதுவாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பார்ப்பதற்கே மக்கள் பயப்படுகிறார்கள்.
கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு உயிர்கூட பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையும் அதற்கு வழிகாட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்தார்.
கரூர் நெரிசல் பலி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் போதிய திட்டமிடல், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜும் கைதாகியுள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இரு நாள்களுக்குப் பிறகு இதுகுறித்து விடியோ வெளியிட்ட விஜய், முதல்வர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.