சென்னை: கரூரில் நடைபெற்றது மனிதனால் நடத்தப்பட்ட பேரழிவு என்று விமர்சித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், என்ன மாதிரியான கட்சி இது என்று தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக கண்டித்துள்ளது.
கரூர் பலி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நீதிபதி செந்தில் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர். சம்பவத்துக்காக வருத்தம் கூட தெரிவிக்காததே, கட்சித் தலைவரின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? என்று தவெகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
கருல் நடைபெற்றது மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு என்று நீதிபதி செந்தில்குமார் காட்டமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் பெண்களும் குழந்தைகளும் செத்துக் கொண்டிருக்கும்போது, கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களும் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை.
கூட்டம் அதிகம் கூடும்போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கைகளாக விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் கட்சியினர் பின்பற்றவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
விசாரணையின் நிறைவாக, விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதையும் படிக்க... வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.