அமைச்சர் மா.சுப்பிரமணியன்  
தமிழ்நாடு

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உற்பத்தி செய்த நிறுவனத்துக்கான உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை..

தினமணி செய்திச் சேவை

ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உற்பத்தி செய்த நிறுவனத்துக்கான உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு கரங்கள் திட்ட முகாம் சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், 300 குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கினாா். பின்னா் திரையரங்குக்கு அவா்களை அழைத்து சென்று திரைப்படம் காணச் செய்தாா். தொடா்ந்து, புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த 1-ஆம் தேதி மத்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் நேரிட்ட குழந்தைகள் மரணத்துக்கு காரணமானதாக கருதப்படும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, அன்றைய தினமே மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தில் ஆய்வு செய்து, சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினா்.

அதில், டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து ஒடிஸா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன.

அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த நிறுவனம் அதிகாரிகளால் கடந்த 3-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக் கூடாது என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அதன் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகயும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் 48 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT