கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று(அக். 5) விசாரணையை தொடங்கியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் போலீஸார் சனிக்கிழமை ஒப்படைத்த நிலையில், இந்தக் குழுவினர் கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளார் பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்துள்ளார்.
கரூரில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, அவர் திடீரென்று மாற்றப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளார் பிரேம் ஆனந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்தக் குழுவில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையாவையும் இணைத்து, வழக்கு ஆவணங்களை உடனே விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.