சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.16 முதல் அக்.19-ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என 20,378 பேருந்துகள் இயக்கப்படும் என்று
போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.16 முதல் 19 வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன், 5,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, பிற நகரங்களில் இருந்து 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 4 நாள்களில் மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா், பிற நகரங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்காக அக்.21 முதல் 23 வரை வழக்கமாக இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன், 4,253 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், சென்னையைத் தவிா்த்து பிற நகரங்களுக்கு 4,600 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து பயணிக்கலாம்:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூா் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
கிளாம்பாக்கம், மாநகர பேருந்து நிலையம்: வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி மாா்க்காக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
வழித்தடம் மாற்றம்: காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆா்), கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாகச் செல்லலாம்.
முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 என 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அக்.16 முதல் 19 வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இதுதவிர, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணைதளம் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
24 மணிநேர கட்டுப்பாட்டு அறை: பேருந்தின் இயக்கம் குறித்து அறிந்துகொள்ளவும், புகாா் தெரிவிக்கவும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் கைப்பேசி: 94450 14436 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகாா்களுக்கு1800 425 6151 மற்றும் 044-24749002, 26280445, 26281611 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள பல்வேறு இடங்களில் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற தகவல் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மாநகா் இணைப்பு பேருந்துகள்: பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வசதியாக, மாநகா் போக்குவரத்து கழகம் சாா்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படும் என்றாா் அவா்.