அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா? அல்லது அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா? என்ற விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தமிழகத்துக்கான பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட இருவரும், சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றுள்ளார்.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை நேற்று தனித்தனியே எடப்பாடி பழனிசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர்களும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.