திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவா் முருகனை விடுவிக்கக் கோரி ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட நளினி தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனைப் பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன் இலங்கையைச் சோ்ந்தவா். எனவே, அவா் திருச்சியில் உள்ள வெளிநாட்டவா் முகாமில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இதை எதிா்த்து அவரது மனைவி நளினி கடந்த 2023-ஆம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், முகாமில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை தன்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் புகழேந்தி, முருகன் திருச்சி முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாா் என்று கூறினாா். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.