கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
காஸா இனப் படுகொலையைக் கண்டித்து 'சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று(அக். 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காஸா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து வருகிற அக். 14 ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் விடியோவைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது:
”கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?
கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.