நாமக்கல்: தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலையை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி இந்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஐந்து மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை அதன் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி. ஆர்.சண்முகப்பா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.எல்.எஸ். சுந்தர்ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி தென் மண்டலத்தில் சுமார் 5,500 டேங்கர் லாரிகள் உள்ளன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு துறைமுகத்திலிருந்து எரிவாயு எடுத்துச் செல்லும் பணியை இந்த லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. மார்ச் மாதம் புதிய விதிமுறைகளை தளர்த்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால் அப்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கருக்கு மட்டுமே ஆயில் நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல் வந்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
துறைமுகங்களில் இருந்து எரிவாயு சேமிப்பு கிடங்குகளுக்கு வரும் எரிவாயுவை லாரிகளில் ஏற்றி பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக எரிவாயு இறக்கும் பணியும் நிறுத்தப்படும்.
இந்தப் போராட்டத்தால் ஐந்து மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். உரிய முடிவு கிடைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை பின்வாங்க போவதில்லை. ரூ. 6000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் ஆயில் நிறுவனங்கள், அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.