தமிழ்நாட்டில் நாளை(அக். 11) 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழ்நாட்டில் கடந்த அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்பட வேண்டிய கிராம சபை கூட்டங்கள் நாளை(அக். 11, சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளன.
அதன்படி 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கிராம மக்களுடன் உரையாடுகிறார்.
கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா? தண்ணீர், தெருவிளக்குகள், குப்பை அகற்றுதல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்படும். அடிப்படை முதல் 3 தேவைகள் குறித்து உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 'நம்ம ஊரு நம்ம அரசு' என்ற திட்டத்தின் கீழ் இவை செயல்படுத்தப்படும்.
அடுத்து சாதிப் பெயர்கள் அல்லது இழிவுபடுத்தும் பெயர்கள் கொண்ட தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், உள்கட்டமைப்புகளின் பெயர்களை மாற்றுவது குறித்து நாளை மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
அடுத்ததாக மத்திய அரசின் கீழ் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒரு கிராமத்தில் நலிவடைந்த குடும்பத்தினர்களை கிராமமே தேர்வு செய்து அந்த முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.