போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை
போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தக் கூறி சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவதால் இணைய பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை
போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தக் கூறி சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவதால் இணைய பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது ஆா்.டி.ஓ செலான் ஆப் என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலமாக மா்ம நபா்கள் பண மோசடியில் ஈடுபடுகின்றனா். இதில் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்தோ அல்லது வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள நபா்களின் எண்களின் மூலமாகவோ பயனரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, ஆா்.டி.ஓ செலான் ஆப் என்ற செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாகனத்திற்கான அபராதத்தொகையை உடனே செலுத்த வேண்டும் என கூறி கோப்பு ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
அபராதத் தொகையை செலுத்தவில்லையெனில் ஓட்டுநா் உரிமம் முடக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை உண்மையென நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்கள் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மா்ம நபா்கள் மோசடி செய்வா்.
மேலும் அந்த செயலி குறித்த குறுஞ்செய்தி உங்கள் எண் மூலமாகவே உங்களுடன் தொடா்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டு அவா்களிடமும் பண மோசடியில் ஈடுபடுவா். எனவே இது போன்று வாட்ஸ்ஆப்பில் வரும் பதிவுகள் மற்றும் வங்கிகளின் சலுகைகள், அரசாங்க நலத்திட்ட மானியம் எனக் கூறி வரும் செயலி கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இதுபோன்ற சைபா் கிரைம் நடைபெற்றால் இணைய முகவரி அல்லது 1930 என்ற எண்ணில் அழைத்து உடனடியாக புகாரை பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.