10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணையம் மூலமாக இணைத்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அக். 11 அன்று 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று அறிவித்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கிராம மக்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
"இந்தியாவிலேயே 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணையம் மூலம் இணைத்து முதல்முறையாக கிராம சபைக் கூட்டம் இப்போதுதான் நடக்கிறது. அதேபோல ஒரு முதல்வர் இதுவரை எந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. நான் 3 முறை கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன்.
ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நிச்சயம் அரசால் நடத்தப்படும். இதுதவிர சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்றன.
கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு தவிருங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரியாக செய்தால், பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும்
தண்ணீரை பணம்போல பார்த்து பார்த்து செலவு செய்யுங்கள். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.